
அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு 2022 ஆகஸ்ட் 14 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக FIFAவின் உறுப்பு நாடுகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFAவின் சட்டங்களை கடுமையாக மீறும் வகையில் மூன்றாம் தரப்பினரின் அநாவசிய செல்வாக்கின் காரணமாக அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த FIFA பொதுச்சபை பணியகம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் அதிகாரங்களைத் தொடர்வதற்கு ஏதுவாக நிருவாகக் குழு அமைக்கப்பட்டவுடன் மற்றும் அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அன்றாட விடயங்களில் அகில இந்திய கால்பந்தாட்ட சம்மேளனம் முழுமையான கட்டுப்பாட்டை பெற்றவுடன் இடைக்காலத் தடை நீக்கப்படும் என FIFA தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 11 முதல் 30 வரை நடத்த ஏற்பாடாகியிருந்த FIFA 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணம் 2022 சுற்றுப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறாது என்பதே இந்த இடைக்காலத்தடையின் பொருளாகும்.
இப் போட்டி தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து FIFA மதிப்பிட்டுவருகிறது. தேவைப்படின் இந்த விடயம் பொதுச்சபையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்தியாவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஆக்கபூர்வமான தொடர்பில் FIFA இருப்பதாகவும் இடைக்காலத்தடை தொடர்பில் சாதகமான முடிவு எட்டப்படலாம் என நம்புவதாகவும் FIFA தெரிவித்துள்ளது.