இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவலவினால் இன்றைய தினம் 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வெளிநாடுகளுக்கு செல்ல அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு எதிர்வரும் நவெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனுத்தாரர் சார்பில் சட்டத்தரணி மைத்திரி குணரத்வும், பிரதிவாதி சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இருதரப்பு சட்டத்தரணிகளும் தங்களது ஆட்சேபனைகளை முன்வைக்க முயன்ற போதிலும், அடுத்த அமர்வில் முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பணித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையான்மை முறியை செலுத்திமையே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.