அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளால் ஆயுதப்போட்டி அதிகரிக்கும் சீனா – அவுஸ்திரேலியா மறுப்பு

ஆக்கஸ் உடன்படிக்கையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கியை கொள்வளவு செய்வதால் பிராந்தியத்தில் ஆயுதபோட்டி அதிகரிக்கும் என சீனா தெரிவித்துள்ளதை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.

அமெரிக்க அவுஸ்திரேலிய பிரிட்டிஸ் தலைவர்கள் ஆக்கஸ் உடன்படிக்கை குறித்த அறிவிப்பைவெளியிட்ட பின்னர் அது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா இந்த உடன்படிக்கை பனிப்போர் கால மனோநிலையை வெளிப்படுத்துகின்றது என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை மீளவலியுறுத்தியுள்ளது.

இந்த உடன்படிக்கை காரணமாக ஆயுதப்போட்டி அதிகரிக்கும் அணுவாயுதபரவல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பாதிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அணுவாயுத பரவல் தராதரங்களை பின்பற்றுவதாக தெரிவிக்கும் இரண்டு அணுவாயுத நாடுகள் அணுவாயுதங்களை வைத்திராத நாட்டிற்கு தொன் கணக்கில் ஆயுதங்களை தயாரிப்பதற்கு உதவக்கூடிய பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை வழங்குகின்றன என ஐநாவிற்கான சீனா தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த கருத்தினை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் நிராகரித்துள்ளார்.

சீனாவின் இந்த கருத்து ஆதாரங்கள் அற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுதங்களை கொள்வனவு செய்வதில்லை என்ற தனது நிலைப்பாடு குறித்து அவுஸ்திரேலியா உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேறு பல நாடுகள் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை கொண்டுள்ளன  ஆனால் அவை அணுவாயுத பரவல் உடன்படிக்கையின் கீழ் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியே அவுஸ்திரேலியாவின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *