
அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ தூரத்தில் இருந்தது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது அட்சரேகை 7.97 மற்றும் தீர்க்கரேகை 91.65 என்று குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. ரிக்டர் அளவு 6க்கும் குறைவாக உள்ளதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது.
சமீப காலமாகவே இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் நில அதிர்வுகள் பதிவாகி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரு மாத காலத்தில் டெல்லி ஹரியானா சுற்றுவட்டார பகுதிகளிலும் சில வடகிழக்கு மாநிலங்களும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.