(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

இன ஒற்றுமைக்கு மதிப்பளிக்காததால் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் பொருளாதாரத்தை பாதித்தது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் அதற்கு சர்வக்கட்சியே இறுதி தீர்வு. இதனையே மக்கள் கோருகிறார்கள்.

அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே அரசியல் தீர்வு வெற்றிப் பெறும் என பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும்,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21)இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நான் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் பிரதிநிதியாக எனது உரையை முன்வைக்கிறேன்.

அண்மையில் பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவியை நான் சந்தித்தேன்,அந்த மாணவியின் தந்தை ஒரு நாளாந்த கூலி தொழிலாளி.நாளாந்தம் கிடைக்கும் 1000 ரூபாவை கொண்டு அந்த குடும்பம் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.

ஆனால் தற்போது அந்த 1000 ரூபா கொடுப்பனவு ஒரு வேளை உணவு தேவையை பூர்த்தி செய்துக் கொள்வதற்கு கூட போதுமானதாக இல்லை.

இந்த நிலைமையை சமாளிக்க குடும்பத்தில் எவராவது நாளாந்தம் பட்டினியில் இருக்க வேண்டியுள்ளது என அந்த மாணவி குறிப்பிட்டார்.

தற்போதைய வாழ்க்கை செலவில் ஒரு குடும்பத்தின் ஒருமாத செலவு குறைந்தப்பட்சம் ஒரு இலட்சம் ரூபாவாக காணப்பட வேண்டும்,நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கிடைக்கப்பெறுகிறது.

நாட்டில் 88 சதவீதமானோர் மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளார்கள்.இதுவே உண்மையான கள நிலைவரம்.

இந்த வரவு செலவுத் திட்டம் கொள்கை வகுப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடனமாக காணப்படுகிறது.மக்களின் எதிர்பார்ப்பு உள்வாங்கப்படவில்லை.

நிகழ்காலத்தை மீட்காமல்,எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் வகையில் உள்ளது.வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தவில்லை.

அரச சேவை மறுசீரமைப்பு, பாடசாலைகளுக்காக இலவச இணையம்,காணி அதிகாரம் பிரதேச சபைக்கு வழங்கள்,தனியார் துறை சேவை காப்புறுதி,வைத்திய பட்டப்படிப்புக்கு பின் புலமை பரிசில் இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கு நன்றி,ஆனால் மக்களை மீட்டெடுக்காமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

பல்வேறு மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளமை கவனிக்காமல் செல்லும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கிறது.37 இலட்ச மக்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள்.குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5000 ரூபா வழங்கப்படுவது எந்தளவுக்கு சாத்தியமாகும்.

வடக்கு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் பிரபல்யமானது என குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் அந்த வரவு செலவுத் திட்டங்கள் அக்கால சூழலுக்கு பொருத்தமானதாக சமர்ப்பிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் எமது சின்ன வெங்காயம் விளைச்சல் செய்து கல் வீடு கட்டினார்கள்.இதனை எவராலும் மறுக்க முடியாது,தேசிய விவசாயத்தை மேம்படுத்த அதன் பின் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அவதானம் செலுத்தவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியே கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.போரின் பாதிப்புகளுக்கு இதுவரை முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை.காணாமல் போனோருக்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை.தியாகம் செய்யுமாறு ஏனைய சமூகத்தினரிடம் குறிப்பிடுவதை போன்று எமது சமூகத்தினரிடம் குறிப்பிட முடியாது.எமது மக்கள் பல தியாகங்களை செய்துள்ளார்கள்.

பொருளாதார பாதிப்பு வேலையின்மையை தீவிரப்படுத்தியுள்ளது. பெரும்பாலான இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள நிதியை போதைப்பொருள் ஒழிப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன்.மக்கள் மத்தியில் எதிர்காலம் குறித்து அச்சமும்,நிகழ்காலம் குறித்து நம்பிக்கையீனமும் எழுந்துள்ளது.இவ்வாறான நிலையில் இளைஞர்கள் இல்லாத போது எதிர்காலத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு சாத்தியமடைய செய்வது.

பொருளாதார பாதிப்புக்கு காரணம் இலவச சேவை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.இலவசத்திற்கு அரசாங்கங்கள் காரணமே தவிர மக்கள் அல்ல.

மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறு.தேவையற்ற நேரத்தில் வழங்கப்பட்ட இலவசங்கள் தவறாயின்,தற்போது தேவையான நேரத்தில் வழங்கப்படாத நிவாரணங்களும் தவறாகும்.

அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.அரச நிறுவனங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

இன ஒற்றுமைக்கு மதிப்பளிக்காமல் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் பொருளாதாரத்தை பாதித்தது.அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் அதற்கு சர்வக்கட்சியே இறுதி தீர்வு,இதனையே மக்கள் கோருகிறார்கள்.அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே அரசியல் தீர்வு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *