இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மன்றத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் இலங்கை முழுவதிலிமிருந்து வருகைதந்த 60 இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் கொழும்பில் இன்று காலை ஆரம்பமானது.
இளைஞர்களிடையே அனைவரையும் உள்ளடக்குதல், சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றினை முன்மாதிரியாகக் கொண்ட தலைமைத்துவ திறன்களை விருத்தி செய்வதே கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள American Spaces இனால் நடத்தப்படும் இளைஞர் மன்றத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023 இன் நோக்கமாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு, ஏனைய தூதரக நிகழ்ச்சித்திட்டங்களின் பரிமாற்ற பழைய மாணவர்கள் மற்றும் American Spaces பங்குதாரர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெறும் இவ்வருட உச்சிமாநாடானது 2018 ஆம் ஆண்டிற்குப்பின்பு நடைபெறும் முதலாவது உச்சிமாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வுச்சிமாநாடானது இளைஞர் மன்ற உறுப்பினர்களின் சமூகப் பிரச்சினைகளைக் கண்டறியும் திறன் மற்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு இலங்கையின் எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய புதுமையான தீர்வுகளை வடிவமைக்கும் திறன் ஆகியவற்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனான ஊடாடும் செயலமர்வுகள் மற்றும் ஆற்றல் விருத்தி அமர்வுகளுடன் பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் வளமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு சேவை-கற்றல் செயற்திட்டத்துடன் உச்சிமாநாடு நிறைவடையும்.
“இலங்கையின் முழுமையான பன்முகத்தன்மையினை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது இளைஞர் மன்றம் இன்று இங்கு கூடியிருப்பதைக் காண்பது எனக்கு ஊக்கமளிக்கிறது.
இளைஞர்களே ஒரு நாட்டின் உண்மையான எதிர்காலமாகும், அவர்களின் கருத்துக்கள் முக்கியமானதாகும். இளைஞர் மன்ற பங்கேற்பாளர்களின் நேர்மறையான, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பானது அவர்களின் தனிப்பட்ட வெற்றியினது அடித்தளமாகவும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, வளமான ஒரு எதிர்காலத்தினை இந்நாட்டில் உருவாக்குவதற்கான அடித்தளமாகவும் அமைய முடியும்” என தூதுவர் சங் கூறினார்.
நேர்மறையான, அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்தும் 18 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்ட இலங்கையர்களே அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்ற உறுப்பினர்களாவர்.
ஒவ்வொரு இளைஞர் மன்ற அணியும், தலைமைத்துவப் பயிற்சி, செயற்திட்ட முகாமைத்துவ அனுபவம் மற்றும் ஒரேவகையான சிந்தனையுடைய சமவயதுடையோர் மற்றும் சமூகப் பங்குதாரர்களுடன் இணைந்து சமூகத் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் ஆர்வமுடைய பல்வேறு பின்னணியைக் கொண்ட 15 இளைஞர்களைக் கொண்டுள்ளது.
இலங்கையில் உள்ள நான்கு American Spacesகளும் ஆண்டு முழுவதும் தலைமைத்துவம், கற்றல் மற்றும் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் அவற்றிற்குரிய சொந்த இளைஞர் மன்றக் குழுவை நடத்துகின்றன.