
அம்பாறை மாவட்டத்தின் சாகாமம் பிரதேசத்தை அண்மித்த மொட்டையாகல் மலை எனும் மலைப்பகுதியின் பின்பாக இன்று (21) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சின்னப்பனங்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கீழ் வரும் இப்பிரதேசத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக விவசாயிகளால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற சாகாமம் வனவிலங்கு பாதுகாப்பு காரியாலய உதவி சுற்றுவட்ட காப்பாளர் ஞா.பிரசாந்தன் மற்றும் கிராம உத்தியோகத்தர் அ.சுபராஜ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் யானையை மீட்டதுடன் மேலதிக உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவலை வழங்கியுள்ளனர்.
யானையின் உடலில் குறிப்பிடத்தக்க காயங்கள் எதுவும் காணப்படாத நிலையில் உடற்கூற்றாய்வின் பின்னரே மரணத்திற்கு காரணம் தெரியவரலாம் என அங்கு கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் நீண்ட நாட்களாக யானைகளின் அட்டகாசம் இப்பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் உடமைச் சேதங்களும் இடம்பெற்று வருவதுடன் விவசாய நிலங்களையும் யானைகள் அழித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.