அரசாங்கத்தின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தமைக்கு கோட்டாபயவின் நடவடிக்கைகளே காரணம் – பந்துல

(எம்.மனோசித்ரா)

 

 

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே ஏனைய வெளிநாட்டு கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மாறாக அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பர் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தனக்கு கிடைக்கப்பெற்ற தவறான ஆலோசனைகளால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல வரிகளையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இதன் காரணமாகவே அரசாங்கத்தின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. எவ்வாறிருப்பினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்துவ நாடு என்ற அடிப்படையில் மீண்டும் வரிகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டுக்கமையவே மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை இன்றி நாட்டை ஒருபோதும் நிர்வகித்துச் செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் , சர்வதேசத்துடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களிலும் எம்மால் ஈடுபட முடியாது. அவ்வாறில்லை என்று கூறுபவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூற வேண்டும்.

சர்வதேசத்துடன் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் செய்ய முடியாவிட்டால் எரிபொருள் , உரம் , எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிகளும் பாதிக்கப்படும்.

இறக்குமதிக்காக எம்மால் விடுக்கப்படும் கடன் சான்று பத்திரம் கூட ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே விரும்பாவிட்டாலும் குறுகிய காலத்திற்கு இந்த வரி சுமையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் பட்சத்தில் 2.9 பில்லியன் டொலர் மாத்திரமே கிடைக்கப் பெறும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே அமைச்சுக்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஏனைய வெளிநாட்டு கடனுதவிகளும் கிடைக்கும்.

அவ்வாறில்லை என்று கூறுபவர்கள் தம்மிடமுள்ள மாற்று வழிகளை அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும். இவை தற்காலிகமான வேதனையாகும். எனவே விரும்பாவிட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *