(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு அதிருப்தியளிக்கின்றன. அரசாங்கம் நிதி வழங்கினால் தேர்தலை நடத்தலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

வாக்குச்சீட்டு அச்சிடல் விவகாரத்தில் அரச அச்சகத் திணைக்கள தலைவர் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பட்டதாக உள்ளது, ஆகவே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து இன்று ஒரு தீர்மானத்தை அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை புதன்கிழமை (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாக குறிப்பிட்டார், ஆனால் வாக்குச்சீட்டுக்கள் ஒப்படைக்கப்படவில்லை.

நிதி நெருக்கடி காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடை நிறுத்தியுள்ளதாக அரச அச்சகத் திணைக்கள தலைவர் ஊடகங்களிடம் குறிப்பிடுகிறாரே தவிர ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருந்தாலும்,அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச நிறுவனங்களும்,அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு போதுமானதாக அமையவில்லை. இழுபறி நிலை காணப்படுகிறது.

திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை அரசியலமைப்பின் பிரகாரம் நாங்கள் மேற்கொண்டாலும்,தேர்தலை நடத்த அரசாங்கம் நிதி வழங்க வேண்டும், நிதி விடுவிப்பில் இன்றும் தாமதம் நிலவுகிறது.

தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28,29,30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு விநியோகம் பணிகளை 24 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும், ஆனால் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை  ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது, பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *