(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று (11) நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவும் முதலாவது உலக சம்பியன் இங்கிலாந்தும் பி குழுவில் இலகுவான வெற்றிகளை ஈட்டின.

நியூஸிலாந்துக்கு எதிராக பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற  போட்டியில் அவுஸ்திரேலியா 97 ஓட்டங்களாலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதே விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களாலும் இலகுவாக வெற்றிபெற்றன.

அலிசா, ஏஷ்லி அபாரம்

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அலிசா ஹீலி பெற்ற அரைச் சதமும் ஏஷ்லி கார்ட்னர் பதிவு செய்த 5 விக்கெட் குவியலும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

நடப்பு மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதூவாகும்.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையாத போதிலும் ஏஷ்லி ஹீலி, அணித் தலைவி மெக் லெனிங் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவைத் தடுத்தனர்.

ஏஷ்லி ஹீலி 38 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களையும் மெக் லெனிங் 33 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட எலிஸ் பெரி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 22 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களையும் குவித்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் அமேலியா கேர் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லீ தஹுஹு 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 14 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றது.

அமேலிய கேர் (21), பேர்னடின் பெசுய்டென்ஹூட் (14), ஜெஸ் கேர் (10) ஆகிய மூவரே 10 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் ஏஷ்லி கார்ட்னர் 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெகான் ஷூட் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அமோக வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.

சொஃபி எக்லஸ்டோனின் துல்லியமான பந்துவீச்சு, நெட் சிவர்-பரன்ட், சொஃபி டன்கி, ஹீதர் நைட் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் இங்கிலாந்தின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் 43 ஓட்டங்களையும் ஷெமெய்ன் கெம்பெல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஹேலி மெத்யூஸும் முன்னாள் அணித் தலைவி ஸ்டெஃபானி டெய்லரும் ஆரம்ப விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால், டெய்லர் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

136 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது.

இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றனர்.

நெட் சிவர்-ப்ரன்ட் 30 பந்துகளில் 40 ஓட்டங்களையும் அணித் தலைவி ஹீதர் நைட் 22 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட ஆரம்ப வீராங்கனை சொஃபியா டன்க்லி 18 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சினேல் ஹென்றி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *