அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

(நெவில் அன்தனி)

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா சுவீகரித்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

பெத் மூனியின் அற்புதமான அதிரடி துடுப்பாட்டமும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அதன் வெற்றிக்கு அடிகோலின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்கள் எனும் கடினமான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்று உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 5ஆவது ஓவர் நிறைவில் மொத்த எண்ணிக்கை வெறும் 17 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீராங்கனை தஸ்மின் ப்றிட்ஸ் (10) ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து லோரா வூல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 46 ஓட்டங்களாக உயர்த்தியபோது மாரிஸ்ஆன் கெப் 11 ஓட்டங்களுடனும் மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 8 ஓட்டங்கள் சேர்ந்தபோது அணித் தலைவி சுனே லூஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். (54 – 3 விக்.)

சுனே லுஸ், லோரா வுல்வார்ட் ஆகிய இருவரும் இரண்டு மனதுடன் இல்லாத ஒரு ஓட்டத்தை எடுக்க முயற்சித்தபோது லுஸ்ஸை வுல்வார்ட் திருப்பி அனுப்பினார். ஆனால், துடுப்பாட்ட எல்லைக்கோட்டை வுல்வார்ட் அடைவதற்கு முன்னர் மூனி எறிந்த பந்தைக் கொண்டு அலிசா ஹீலி அவரை ரன் அவுட் ஆக்கினார்

இதன் காரணமாக தென் ஆபிரிக்கா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் ஓட்ட வேகமும் கணிசமாக குறைந்தது.

தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் மேலும் 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அது தென் ஆபிரிக்காவுக்கு இமாலய இலக்காக அமைந்தது.

எனினும் மறுபக்கத்தில் துணிச்சலை வரவழைத்து அதிரடியில் இறங்கிய லோரா வுல்வார்ட் 48 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ் அடங்கலாக 61 ஓட்டங்களைக் குவித்து தென் ஆபிரிக்காவுக்கு சற்று தெம்பை ஊட்டினார்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது அவர் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்காவில் முதாலாவது உலகக் கிண்ண சம்பியன் வெற்றிக் கனவு கலைந்து போனது.

லோரா வுல்வார்டும் க்ளோ ட்ரையொனும் 4ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவரைத் தொடர்ந்து க்ளோ ட்ரையொன் 25 ஓட்டங்களுடனும் ஆனெக் பொஷ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க தென் ஆபிரிக்காவின் வெற்றி வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது.

நாடின் டி க்ளார்க் 8 ஓட்டங்களுடனும் சினாலோ ஜஃப்டா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மெகான் ஷூட், ஏஷ்லி கார்ட்னர், டார்சி ப்றவுன், ஜெஸ் ஜொனாசன் ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிதலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீராங்கனை பெத் மூனி மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டார்.

அலிசா ஹீலியும் பெத் மூனியும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்களில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தபோதுஅவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பெத் மூனியுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஏஷ்லி கார்ட்னர் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் க்றேஸ் ஹெரிஸ் (10), அணித் தலைவி மெக் லெனிங் (10) எலிஸ் பெரி (7), ஜோர்ஜியா வெயார்ஹாம் (0) ஆகியோர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க விளைந்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.ஷ

ஆனால், மறுபக்கத்தில் மிக அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி 53 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதனிடையே எலிஸ் பெரியுடன் 15 பந்துகளில் 33 ஓட்டங்களை பெத் மூனி பகிர்ந்ததால் மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடந்தது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *