ஆசியக் கிண்ண வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான இலங்கை இன்று ஆப்கானை எதிர்கொள்கிறது !

ஆசிய கிண்ண  50 ஓவர்  கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான இலங்கை, 8 வருடங்களின் பின்னர் மீண்டும் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான மிகப்பெரிய சவாலை வெற்றி கொள்ளும் குறிக்கோளுடன் துபாய் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (27) இரவு நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தனை எதிர்கொள்ள உள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆசிய கிரிக்கெட் பேரவை இடம் மாற்றிய போதிலும் அப்போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்று உரிமை இலங்கையை விட்டு விலகவில்லை.

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்கின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை முதல் சுற்று, சுப்பர் 4 சுற்று என்ற இரண்டு சுற்றுகளாக நடைபெறுவதால் முதல் சுற்றில் 2 போட்டிகளிலும் வெற்றிபெறுவதைக் குறியாகக் கொண்டு தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை களம் இறங்கவுள்ளது.

முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு மாத்திரமே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற முடியும் என்பதால் மிகவும் கடுமையான பி குழுவில் இடம்பெறும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு பலத்த சவால் காத்திருக்கிறது.

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான  ஆரம்பப் போட்டி  கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு ஒப்பானதாகவே அமையப்போகிறது. எனவே இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கு முன்னர் தகுதிகாண் சுற்றில் விளையாடவேண்டிய இக்கட்டான நிலையில் இலங்கை இருக்கிறது. எனவே அதனையும் கருத்திக்கொண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை இலங்கை அணி வெளிப்படுத்த வேண்டிவரும்.

இலங்கையும் ஆப்கானிஸ்தானும் ஒரே ஒரு தடவை இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது இலங்கை வெற்றிபெற்றிருந்தது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்களால் இலங்கை வெற்றி கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கையின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் விளையாடிய 11 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2 வெற்றிகளை மாத்திரம் ஈட்டிய இலங்கை மற்றொரு போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. இந்த 3 போட்டிகளும் அவுஸ்திரேலியாவுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை தனது அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என இங்கிருந்து துபாய்க்கு புறப்படுவதற்கு முன்னர் தசுன் ஷானக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ‘ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்து ஐக்கிய இராச்சியத்துக்கு நாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்’ என பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியில் 8ஆம் இலக்கம்வரை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு சாதகமாகும்.

தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்கு ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமர கருணாரட்ன ஆகியோர் முதல் 8 இடங்களில் துடுப்பெடுத்தாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். அதேவேளை, விக்கெட்களுக்கு இடையில் ஓடும் வேகத்தை இவர்கள் அதிகரித்து ஒற்றைகளை இரண்டாகவும் இரட்டைகளை மூன்றாகவும் ஆக்க முயற்சிக்க வேண்டும்.

துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்த வெண்டுமானால் தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டாரவை இறுதி அணியில் சேர்க்க  அணி  முகாமைத்துவம் முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

6 துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இடமபெறும் பட்சத்தில் வேகபந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்கவும் சுழபந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் இறுதி அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 துடுப்பாட்ட வீரர்களுடன் களம் இறங்கினால் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப மேலதிக வேகப்பந்துவீச்சாளர் அல்லது சுழல்பந்துவிச்சாளர் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான் தனது அதிசிறந்த வீரர்களுடன் இலங்கையுடனான போட்டியை எதிர்கொள்ளும் என்பது நிச்சயம்.

இலங்கையைப் போன்றே ஆப்கானிஸ்தான் அணியிலும் சகலதுறை வீரர்கள் தாராளமாக இடம்பெறுவதுடன் துடுப்பாட்ட வரிசையும் நிண்டதாக இருக்கிறது.

ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், அணித் தலைவர் மொஹமத் நபி, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித் கான், கரிம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பரீத் அஹ்மத் ஆகியோர் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள் என அனுமானிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் இந்த வருடம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டியுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 6இல் வெற்றிபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *