(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை. கொவிட் தொற்று பரவல் காலத்தில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் வெளியிட்ட சுற்று நிருபத்தை மீள் திருத்தம் செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (21) எதிரணியின் சுயாதீன குழு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டதாவது,

ஆசிரியர்களுக்கு வேறு ஆடைகளில் பாடசாலைகளுக்கு வருவதற்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்படும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

ஆனால் இவ்வாரம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சிலர் வேறு ஆடைகளில் சென்றமை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜோசப் ஸ்டாலின் போன்றோரின் இது தொடர்பான கோரிக்கைகளை பாராளுமன்றம் அனுமதிப்பது போன்றே இருக்கின்றது. இந்த விடயத்தில் குறித்த ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொது நிர்வாக அமைச்சினால் கொவிட் காலத்தில் அரச அலுவலக பணியாளர்களுக்கு எளிதான ஆடைகளை அணிந்து வரும் வகையில் சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த சுற்றுநிருபத்தை பொருத்தமான வகையில் மீள் திருத்தம் செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதில் அரச ஊழியர்களுக்கு என்றே கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் அரச ஊழியர்கள் என்பதனாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான சுற்றுநிருபத்தில் ஒழுக்கம் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆடைகள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் பொது நிருவாக அமைச்சுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரியுள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *