
(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் மக்களின் அபிலாசைக்கு எதிராக செயற்பட்டால் மக்கள் போராட்டம் பலமாக வலுவடையும்.தேர்தலில் படுதோல்வி அடைவதை அறிந்தே அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அதிக கவனம் செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் , உள்ளுராட்சி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு வங்குரோத்தது நிலை அடைந்து விட்டுள்ளது,ஆகவே தேர்தலை நடத்த நிதி இல்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேர்தலுக்கு செல்லும் திறன் இல்லாத காரணத்தினால் அச்சமடைந்து அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தேர்தல் முறைமை ஊடாக பிற்போட அவதானம் செலுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,பொதுஜன பெரமுனவின் அரச தலைவர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.ராஜபக்ஷர்களை மக்கள் வெறுத்த காரணத்தினால் தான் பொதுஜன பெரமுன எதிர்வாதியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமது தலைவராக தெரிவு செய்துக் கொண்டார்கள்.
தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.மக்கள் ஆதரவு உள்ள அரசாங்கத்திற்கு தான் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும்.பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்து பொருத்தப்பட்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கிகாரம் கிடையாது.
நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்களின் அபிலாசைக்கு எதிராக செயற்பட்டால் மக்கள் போராட்டம் மேலும் வலுவடையும் என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.