(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு இடைக்கால ஜனாதிபதிக்கு இருக்கும் அவசரம் என்ன? அதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்? புதிய அரசியல் அமைப்புப்பொன்றை கொண்டுவரவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்து அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டில் 7 ஜனாதிபதிகள் நாட்டை ஆட்சி செய்தபோதும் 13ஐ முழுமையாக செயற்படுத்த எந்த ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக 13ஐ கொண்டுவந்த ஜனாதிபதி ஜே.ஆர் கூட இதனை முழுமையாக செயற்படுத்தவில்லை. அவ்வாறு இருக்கையில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு 13ஐ முழுமையாக செயற்படுத்த இருக்கும் அவசரம் என்ன? அதற்காக அவருக்கு யார் அதிகாரம் வழங்கியது?
அத்துடன் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி ஆசனத்தில் இருப்பது கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்பட் மக்கள் ஆணையின் அடிப்படையிலாகும்.
புதிய அரசியல் அமைப்புப்பொன்றை கொண்டுவரவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் ஆணை வழங்கி இருந்தனர். நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண, நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கே இந்த மக்கள் ஆணை வழங்கப்பட்டது.
அதனால் மக்கள் ஆணை இருப்பது புதிய அரசியல் அமைப்பொன்றை கொண்டு வருவதற்கே அன்றி 13ஆம் திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதற்கு அல்ல.
அதனால் இடைக்கால ஜனாதிபதி ஒருவரின் தலைமையில் தற்போது 13ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று அவசியமில்லை. அதனால் கோட்டாபய ராஜபக்ஷ் வாக்குறுதியளித்த புதிய அரசியலமைப்பை கொண்டுவாருங்கள். அது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். விவாதிப்போம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எனவே 6 மாதங்களுக்கு ஒருமுறை அக்கிராசன உரை நிகழ்த்தி வீழ்ந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதற்கு பல் வேலைத்திட்டங்கள் இருக்கும் நிலையில் அக்கிராசன உரை என நகைச்சுவை கதை சொல்லி இருக்கிறது.