இந்தியாவின் பழம்பெரும் கட்சியில் தலைவர் தேர்தல்!

இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (17) நடைபெறவுள்ளது.

இந்தியாவின் மிக பழமையான மற்றும் வரலாற்றைக் கொண்ட கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 137 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தல் இடம்பெறுவது 6-வது முறை ஆகும்.

இந்த தேர்தலில் காந்தி – நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

24 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி – நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் பதவியில் அமரவுள்ளார். இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் உள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவராவார். அவர் தற்போது 80 அகவையை பூர்த்தி செய்துள்ளார்.
அதே போன்று 66 அகவை கொண்ட சசி தரூர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.

9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களித்து  இவர்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யவுள்ளனர்.

இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும், சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று இடம்பெறுகின்றது.  இதேவேளை, 1939-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது.
இதில்  மகாத்மா காந்தியினால் பரிந்துரை செய்யப்பட்ட சீதாராமய்யா, நேதாஜி சுபாஷ் சந்திர போசிடம் தோல்வியைத் தழுவினார்.

சுதந்திரத்துக்கு பின்னர் 1950-ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் சர்தார் வல்லபாய் படேலின் ஆதரவாளரான புருசோத்தம் தாஸ் தாண்டனும், ஜவகர்லால் நேருவின் தேர்வான ஆச்சாரிய கிருபளானியும் களம் கண்டனர்.

அதில் தாண்டன் பெரும் வெற்றி பெற்றார். 1977-ம் ஆண்டு இடம்பெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சித்தார்த்த சங்கர் ரேயையும், கரன் சிங்கையும் ஆந்திர மாநிலத்தின் பிரமானந்த ரெட்டி வீழ்த்தி வெற்றி கண்டார்.

* 1997-ம் அண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டியில் சரத்பவாரையும், ராஜேஷ் பைலட்டையும் வீழ்த்தி சீதாராம் கேசரி வெற்றி பெற்றார்.

* 2000-ம் ஆணடு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தின் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா களமிறங்கினார்.

இந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். தற்போது சோனியாவே தலைவராக செயல்படுகிறார்.

இந்தநிலையில்  இன்று தேர்தல் இடம்பெறுவதுடன், தேர்தல் முடிவுக்கு இன்னும்  2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *