உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் உடல் நல குறைவின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முலாயம் சிங் யாதவ், ( வயது 82) உடல் நல குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை முலாயம் சிங் யாதவ்வின் மகனும், சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ், கட்சியின் அதிகாரப்பூர்வமான சுட்டுரை பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்..
இந்நிலையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரான முலாயம் சிங் யாதவின் உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறும் என அம் மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
82 வயதான முலாயம் சிங் யாதவின் உடல் ஹரியானா மாநிலம் குருகிராம் மருத்துவமனையிலிருந்து அவரது சொந்த ஊரான சைஃபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் கட்சித் தலைவர்கள், சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு அவரது சொந்த கிராமத்தில் அரசின் முழு மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள், அவரது சொந்த கிராமத்திற்கு வருகை தரவிருப்பதால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.