ஜி20 அமைப்பின் தலைமைத்துவ பதவியை டிசம்பர் 1, முதல் இந்தியா பொறுப்பேற்கவுள்ளதால், இந்தோனேசியா – பாலி நகரில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகை குறுகியது, ஆனால் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் இது மிகவும் முக்கியமானது என்று இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் மனோஜ் குமார் பார்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ பதவியை முறையாக ஏற்றுக்கொள்வார்.
ஜி20 தலைமைத்துவ பதவியை இந்தியா எடுக்க இருப்பதால், பிரதமர் மோடி ஜி20க்கு வருவது முக்கியமானது. இந்தியா தொடர்ந்து இந்தோனேசியாவுக்கு உதவி செய்து வருகிறது. மேலும் இந்தியாவின் ஒத்துழைப்பை இந்தோனேசிய அரசு அங்கீகரிப்பதாக இந்திய தூதர் மேலும் கூறினார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமைப் பாத்திரங்களை மேற்கொள்ளும் வகையில் உருவாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா ஜி 20 அமைப்பின் தலைமைத்துவ பதவியை ஏற்கும்.
பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ஜி20 சின்னத்தின் வர்ணங்கள் இந்தியாவின் தேசியக் கொடியின் துடிப்பான நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை மற்றும் நீல நிறங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் இது பூமியை இணைக்கிறது என்று உத்தியோகப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.