இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, தமிழ்நாட்டு தேயிலை கூட்டுத்தாபனங்களுக்கு உரித்தான பெருந்தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா – இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய ஆசிரியர்களை நியமித்து, புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.