இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் அறிவித்திருந்தார். மேலும் ஆசிய கோப்பை தொடர், நடுநிலையான ஒரு இடத்தில் நடைபெறும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமிஸ் ராஜா, ’பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணி வரவில்லை என்றால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும்’ என்று பதிலளித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இது ஒரு சிக்கலான பிரச்சினை. நான் உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால் நீங்கள் என்னிடம் பேசுவீர்களா?

திறந்த வெளியில் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பயங்கரவாதத்திற்கு உதவினால், அங்கே தலைவர்கள் யார், முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பதில் எந்த மர்மமும் இல்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் சாதாரணமானது என்று நாம் நினைக்கவே கூடாது. மறைமுகமாக பாகிஸ்தான் பயங்கரவாததிற்கு உதவுகிறது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் உரிமை ஒரு நாட்டிற்கு உண்டு என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. பாகிஸ்தான் மீது உலகளாவிய அழுத்தம் இருக்க வேண்டும். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குரலெழுப்பாத வரையில், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க இயலாது. எனவே, இதனை இந்தியாதான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனென்றால் நமது இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். இதன்மூலம், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு தொடர்கள் நடைபெறாது என்பதை மத்திய அரசு தெளிபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *