இந்திய உதவியில் கிடைத்த பாவனைக்குதவாத அரிசி மீட்பு

வவுனியாவில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய உதவியில் கிடைத்த அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் இன்று(29) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை குறித்த அரிசியின் நிலை குறித்தும் அது பாவனைக்கேற்றதா என்பதனை ஆராயவும் பொது சுகாதார பிரசோதகர்களும் அங்கு பிரசன்னமாகி பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது 1272 கிலோ இந்திய உதவித்திட்டத்தில் கிடைக்கப்பெற்ற அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த அரிசியினை மேலதிக பரிசோதனைகளுக்காக கொண்டு செல்ல வேண்டியிருப்பதனால் அரிசி முழுவதனையும் பிரதேச செயகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென பொதுமக்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததுடன் குறித்த அரிசி தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதேவைளே அப்பகுதி மக்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பிரதேச செயலாளர்,

கிராம உத்தியோகத்தரின் பக்கம் இதில் பிழைகள் இருந்தாலும் கூட பொது அமைப்புகளுக்கு தெரியாமல் இருக்கவில்லை எனவும் தனியே அரச உத்தியோகத்தர்கள் வைத்து மட்டும் கிராமத்தை நடத்தவில்லை. அதற்காகவே பொது அமைப்பக்களை தெரிவு செய்கின்றோம். பொது அமைப்புக்களுக்கும் அதற்கான பொறுப்புள்ளது.

தங்கள் மக்களின் பிரச்சனையை உரிய தரப்புக்கு எடுத்து கூறியிருக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பொது அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புகையிரத நிலையத்திற்கு வந்த பொருட்களை வாகனங்களில் கிராமங்களுக்கு அனுப்பிய போது மழை காரணமாக அரிசிகள் சில நனைந்தமையால் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக கிராம சேவகராலும், கிராம அபிவிருத்தி சங்கத்தாலும் இப்போது தெரியப்படுத்தியுள்ளனர்.

இன்று இந்த அரிசி பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதனை பரிசோதிப்பதற்காகவே வந்திருந்தோம். பொது சுகாதார பரிசோதகர்களின்  அறிக்கையின் பிரகாரம் குறித்த அரிசி உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த அரிசியை இதே இடத்தில் கழுவி காய வைத்து மீண்டும் வழங்குவதற்கான நிலைக்கு கொண்டு வரலாமாக இருந்தாலும் இவ்விடத்தில் அதற்கான வசதிகள் இல்லை. ஆகவே அதனை எடுத்து சென்று பரிசோதித்து பொது சுகாதார பரிசோதகர்களின் அறிக்கை கிடைத்த பின்னரே மேற்கொண்ட நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *