இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிணைப்பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான படகை இடைமறிக்க முயன்ற போது இந்திய கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் தமிழக கடற்றொழிலாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தமிழக அரசாங்கம், இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

காயமடைந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் வீரவேலுக்கு 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் படையினரால், இந்திய கடற்றொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய படையினரின் இந்த செயல் இந்திய கடற்றொழிலாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 21 அதிகாலையில், பாக்கு நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால் “சந்தேகத்திற்குரிய படகு” ஒன்று இடைமறிக்கப்பட்டது.

பலமுறை எச்சரித்தும் படகு நிறுத்தப்படாமை காரணமாக, அதன் மீது துப்பாக்கி சூடு, நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, படகில் பயணித்தவர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் ராமநாதபுரம் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பு தரப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை காயமடைந்த தமிழக கடற்றொழிலாளரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த கடற்றொழிலாளர் பயணித்த படகில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 3 பேரும் சம்பவ நேரத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *