இந்திய கிரிக்கெட் பயிற்றுநர் ராகுல் ட்ராவிட்டுக்கு கொவிட் -19 தொற்று

இந்திய கிரிக்கெட் பயிற்றுநர் ராகுல் ட்ராவிட் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையைத் தொடர்ந்து வெளியான மருத்துவ அறிக்கை நேர்மறையாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இன்று அறிவித்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இவ் வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இந்திய அணி, அங்கு பயணமாவதற்கு முன்னர் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே ட்ராவிடுக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

துபாயில் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற இந்திய அணி புறப்படத் தயாரான நிலையிலேயே ராகுல் ட்ராவிடுக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியா தனது ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானை துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.

இந் நிலையில் கொவிட் தொற்றுக்குள்னான ட்ராவிட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவருக்கு இலேசான அறிகுறிகள் இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

ட்ராவிடுக்கு எதிர்மறையான கொவிட் – 19 அறிக்கை கிடைத்ததும் அவர் இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தகுதிகாண் நாடு ஆகிய 6 அணிகள் பங்குபற்றும் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய அணியினர் இன்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்கின்றனர்.

ஸிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடிய கே.எல். ராகுல் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் அங்கிருந்தே நேரடியாக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ளனர்.

இந்திய குழாம்

ரோஹித் ஷர்மா (தலைவர்), கே.எல். ராகுல் (உதவி அணித் தலைவர்), அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆவேஷ் காண், யுஸ்வேந்த்ர சஹால், தீப்பக் ஹூடா, ரவிந்த்ர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி, புவ்ணேஷ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, ரிஷாப் பன்ட், ரவி பிஷ்னோய், சூரியகுமார் யாதவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *