இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் – ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

(நா.தனுஜா)

இந்தியாவின் இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வியாழக்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் இந்திய தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் விவகாரத்துடன் தொடர்புபட்ட சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை உள்ளிட்ட 47 தரப்பினரின் பெயர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

அதேவேளை பதிவுசெய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம், பதிவுசெய்யப்படாத விநியோகஸ்தர்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதி வழங்கலில் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வகிபாகம், அவசர கொள்முதல் நடைமுறைகள் உள்ளடங்கலாக கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாமை மற்றும் இச்செயன்முறை சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரால் தவறான முறையில் பயன்படுத்தப்படல் ஆகியவற்றுக்கு எதிராகப் பொதுநல அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் இரு தனியார் நிறுவனங்களிடமிருந்து மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையின் ஊடாக அரசியலமைப்பிற்கான 12(1) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவமாக நடாத்தப்படுவதற்கான மக்களின் அடிப்படை உரிமையும், 14(ஏ) சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமையும் மீறப்பட்டிருப்பதாக அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு, இந்நடவடிக்கை சுகாதாரத்துறை, மக்களின் சுகாதாரநலன் மற்றும் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொதுநிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முறையற்ற பரிந்துரைக்கு அமைவாக மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்தல், 38 வகையான மருந்துப்பொருட்களுக்கான அனுமதி வழங்கல், இம்மருந்துப்பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தல், இம்மருந்துப்பொருட்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடுமாறு இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *