
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடுவதால் பிற நாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதி இல்லாததால் அவர்கள் டி20 கிரிக்கெட்டின் பல பரிமாண அனுபவங்களில் இருந்தும் திறமை வளர்ப்பில் இருந்தும் தடுக்கப்படுகிறார்கள் என்று நடப்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து இந்த விவாதம் எழுந்துள்ளது.
உதாரணமாக, உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்துமே தரமான கிரிக்கெட்டைத்தான் ஆடுகின்றன. இந்த லீகுகளில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுக்க முழுக்க வணிகக் காரணங்களுக்காக இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் ஆட விரும்பினாலும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து, ஐபிஎல் உட்பட ஓய்வு அறிவித்தால்தான் முடியும். ஓய்வு அறிவித்த பிறகு எந்த டி20 லீக் அணியின் உரிமையாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள்?
இப்போது ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் டேவிட், பேர்ஸ்டோ உட்பட பல வீரர்களும் பல நாட்டு தனியார் லீகுகளில் விளையாடுகின்றனர். புதிதாக தென் ஆப்பிரிக்க டி20 லீக், யுஏஇ டி20 லீகில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள்தான் அணிகளை வாங்கியுள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி இல்லை. இத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட தடையினால்தான் தற்போது ஆடும் இந்திய வீரர்கள் பிற நாடுகளில் ஐசிசி தொடர்களில் ஆடும் போது சரிவர ஆட முடியவில்லை என்று ஒரு முக்கியமான, பரிசீலிக்கத்தக்க விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இணையதளத்தில் நடைபெற்ற விவாதக் களத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் மற்றும் டாம் மூடி ஆகியோர் கலந்து கொண்டு இது பற்றி பேசி இருந்தனர்.