(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன , மதவாதங்களை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்றத்தில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வடக்கின் வசந்தம் எனக் கூறினர். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் வடக்கின் வசந்தத்தை அவதானிக்கவில்லை.

வடக்கிற்கும் , தெற்கிற்கும் முழு நாட்டுக்கும் ராஜபக்ஷாக்கள் வழங்கிய பரிசுப்பொதி இனவாதமும் , இனபேதமும் , மதவாதமும் , மதபேதமும் வங்குரோத்தடைந்த இலங்கையுமாகும்.

ஒவ்வொருவரும் தாமே தேசப்பற்றுடையவர்கள் எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைவரும் ஒரே சேற்றில் தான் புரண்டு கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் , நல்லிணக்கம் சென்ற சொற்பதம் தீய சொல்லாகவே பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இன, மதவாதங்களைத் தூண்டும் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம்.

நான் கூறும் இந்த விடயம் அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாகும். யானை, காகம் , மொட்டு அரசாங்கத்தில் நாட்டில் தேர்தல் இல்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாக்களிக்குமு; உரிமையில் எவராலும் கை வைக்க முடியாது. அதே நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கும் அந்த அதிகாரம் கிடையாது. பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டமைக்காக தேர்தல் ஆணைக்குழுவை மாற்ற முடியுமா?

வேட்புமனு தாக்கல் இடம்பெற்று , தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்களை மாற்றுவதற்கும் எவருக்கும் அதிகாரம் கிடையாது.

எனவே பாராளுமன்றத்தில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல் தேர்தலை நடத்துவதற்கான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். சதித்திட்டங்கள் ஊடாக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சகலருக்கும் எமது ஆட்சியில் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *