
கொழும்பில் தரித்துநிற்கின்ற இந்தியக் கடற்படைக் கப்பலான சுகன்யாவில், 2023 பெப்ரவரி 28ஆம் திகதியன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் உரை நிகழ்த்தியிருந்தார்.
இந்திய கடற்படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பாதுகாப்பு படையினர் மத்தியில் இங்கு உரையாற்றிய பிரதி இந்திய உயர் ஸ்தானிகர், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் மிகவும் வலுவானதும் நிலையானதுமான ஆதாரமாக இரு தரப்பினரிடையிலுமான பயிற்சிகள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் 7 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த ஒதுக்கீட்டுடனான விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் ஊடாக நிதி வழங்கப்படும் செயற்திட்டம் மூலமாக ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட1500 பயிற்சி ஆசனங்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு ஒதுக்கப்படுவதாகவும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த பதில் இந்திய உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய இராணுவ அக்கடமி, விமானப் படை அக்கடமி மற்றும் இந்திய கடற்படை அக்கடமி போன்ற பாதுகாப்புத் துறை சார்ந்த பல முன்னணி நிறுவனங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதற்கு மேலதிகமாக பல்வேறு விசேட சேவைகள் குறித்த பயிற்சிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி கற்கைநெறிகளில் இலங்கைக்கு அதிகளவான இடங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முன்னணி பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிகளைப்பெற்ற அதிகாரிகளில் பலர் இலங்கையின் முப்படைகளினதும் தலைமை அதிகாரிகளாக பணியாற்றியமை குறித்து இந்தியா திருப்தி அடைவதாக பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார்.
இந்திய இலங்கை உறவுகள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதாகவும் அந்த உறவானது இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் மிகமுக்கியமான இடத்தினைக் கொண்டிருப்பதாகவும் பதில் உயர் ஸ்தானிகர் ஜேக்கப் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
சகல துறைகளிலுமான ஈடுபாட்டினை மேலும் ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொண்டுவரும் நிலையில் குறுகிய மற்றும் மத்திய காலங்களில் மிகவும் முக்கியத்துவம்பெறும் ஐந்து விடயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டில் இலங்கை மக்களுக்காக இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆதரவின் அடிப்படையில் பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பினை கட்டி எழுப்புதல் இவற்றில் முதல் விடயமாக அமைகின்றது.
அத்துடன் தேசிய நாணயங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், இலகுவாக முதலீடுகளை மேற்கொள்ளல் மற்றும் நிதி ரீதியான ஒத்துழைப்பினை வலுவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை அவர் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இரண்டாவதாக விமான மற்றும் கப்பல், டிஜிட்டல் மற்றும் சக்தித்துறை சார்ந்த தொடர்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் இருதரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை.
மூன்றாவதாக நலிவுநிலையிலுள்ள சமூகங்கள் மீதான அக்கறையுடன் ஏற்கனவே காணப்படும் பல பில்லியன் பெறுமதியான ஒத்துழைப்பின் அடிப்படையில் புதிய வடிவிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையை கட்டி எழுப்புதல்.
நான்காவதாக, இரு நாட்டு மக்களிடையிலுமான பரிமாற்றங்கள் மற்றும் தொடர்புகளை குறிப்பாக சுற்றுலாப் பயணங்களை மேம்படுத்த வேண்டியதேவை இருதரப்புக்கும் காணப்படுகின்றது.
பரஸ்பர நலன்களுக்காக கலாசார, மத, இசை, திரைப்படத்துறை மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றின் அடிப்படையிலான பிணைப்புகளை வலுப்படுத்துதல் ஐந்தாவது விடயமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.