உள்நாட்டு சுகாதார அணையாடை (Sanitary Napkins) உற்பத்திகளுக்காக இறக்குமதி செய்யப்படும் ஐந்து மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை விலக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், சுகாதார அணையாடைகளை மலிவான விலையில் தயாரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகளை கொண்ட பொதியின் விலை 50 முதல் 60 ரூபாவினால் குறைக்கப்படும்.
இந்த வரிச் சலுகைகளுடன், ஒரு பொதியின் அதிகபட்ச சில்லறை விலை 260 – 270 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட முடிவுப் பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகள் 18% அல்லது 19% குறைக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு இணங்க, வரிச்சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் இறக்குமதி நிலையிலேயே வரிச்சலுகைகளைப் பெறுவதற்கு தொழில்துறை அமைச்சின் செயலாளரிடமிருந்து பரிந்துரையைப் பெற வேண்டும். அதற்கான வழிமுறை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து மூலப்பொருட்கள் இறக்குமதி மற்றும் இடைநிலை பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரி 15%, செஸ் வரி 10% -15% மற்றும் துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி (PAL) 10% என்பன தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வெற் (பெறுமதி சேர் வரி) பூஜ்ஜிய விகிதம் வழங்கப்படுகிறது.
அத்துடன், முடிக்கப்பட்ட சுகாதார அணையாடைகளை இறக்குமதி செய்பவர்களும் வெற் வரி விலக்கை பெறுவர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அணையாடைகளுக்கும் விதிக்கப்படும் அதிக வரியால் அவற்றின் விலை உயர்வதால், மூலப்பொருட்களின் இறக்குமதிக்கான வரியை குறைக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.