
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 இறுதி போட்டி மழையால் தடைபட்டால் நாளை மறுதினம் நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இதேவேளை, இவ்வருடத்திற்கான உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 பேரின் பெயர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டது.
இந்த 9 வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க மாத்திரமே இலங்கை அணி சார்பாக தெரிவாகியுள்ளார்.
அவர் இம்முறை 8 போட்டிகளில் கலந்து கொண்டு 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, இங்கிலாந்தின் சேம் கரன், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரசாய் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்களாவர்.
இந்நிலையில், இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து இந்த ஆண்டு உலக கிண்ண ரி20 கிரிக்கெட் தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதனிடையே. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்திய ரி20 அணியை வழிநடத்தும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தோல்வியால், கலக்கமடைந்த இந்திய விளையாட்டு ரசிகர்கள், உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்காக வாங்கிய நுழைவுச் சீட்டுகளை மறுவிற்பனை செய்வதையும் காண முடிகின்றது.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல போட்டி நடுவராகவும், குமார் தர்மசேன கள நடுவராகவும் செயற்படுவார்கள் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இறுதிப் போட்டியில், தர்மசேனாவின் துணை நடுவராக தென்னாப்பிரிக்காவின் முர்ரே எராஸ்மஸ் செயற்படவுள்ளார்.