
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுப் பணிப்பாளர் சென் சென் பிரதிப் பணிப்பாளர் உத்சவ் குமார் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.