(நா.தனுஜா)

இலங்கை கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும், அதனை முன்னிறுத்தி சர்வதேச நாடுகள் மற்றும் நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டு சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சிடம் நிதியியல் ஒத்துழைப்பு ஆவணமொன்றை வழங்கியிருப்பதாக மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவிகோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அச்செயன்முறைக்கு உதவுவதாக எக்ஸிம் வங்கி நிதியமைச்சிடம் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாவோ நிங், அனைத்து வர்த்தகக் கடன்வழங்குனர்களும் ஒத்தவிதத்திலான கடன்சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பல்தரப்புக்கடன்வழங்குனர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் தற்போதைய கொள்கையையும் கடன்சார் விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டையும் அடிப்படையாகக்கொண்டவையாகும். அதேவேளை இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கின்றது.

இலங்கை கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்கு உதவுவதில் சீனா கொண்டிருக்கும் அக்கறை மற்றும் கடப்பாடு ஆகியவற்றையே அதன் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன’ என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து நிதியியல் கட்டமைப்புக்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் மாவோ நிங் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய நெருக்கடிநிலையிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கும், அதன் கடன்நெருக்கடியைக் குறைப்பதற்கும், இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கும் உதவுவதில் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுடன் கூட்டாக இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் சீன வெளிவிவகாரப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *