
(எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்காவின் பென்டகன் முதன்மை பிரதி பாதுகாப்பு செயலர் ஜெடிடியா பிறோல் தலைமையில் 22 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதம் தரித்து தேசிய புலனாய்வுத் திணைக்களத்திற்குள் பிரவேசிக்கும் போது எமது புலனாய்வு அதிகாரிகளின் ஆயுதம் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் தேசிய புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச, பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்கு ஏன் வருகை தந்தார்கள்,எவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்பதை ஜனாதிபதி அல்லது பிரதமர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு ஓரிரு வாரங்களுக்குள் அமெரிக்காவின் முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா பி றொல் தலைமையில் 22 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 16 ஆம் விசேட விமானம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்கள்.
அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள் அத்துடன் அவர்கள் தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரதானியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
அமெரிக்காவின் பென்டகன் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகள் சிறப்பு விமான சேவை அதாவது ஜனாதிபதியின் சிறப்பு விமான சேவை ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.அத்துடன் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்த விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அரச புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்கள். அதன்போது புலனாய்வு திணைக்களத்தில் இருந்த பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பு ஆயுதங்கள் கலைக்கப்பட்டு அவர்கள் நிராயுதபானிகளாக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆயுதங்களுடன் புலனாய்வு திணைக்களத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள்.
இலங்கையின் புலனாய்வு தகவல்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு சேவையின் கீழ் கொண்டு வர பெண்டகன் அதிகாரிகள் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இவ்வாறான சம்பவம் 2001 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது. 2004 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது.
இலங்கையில் யுத்தம்இஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான பின்னணியில் இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள் யாரை சந்தித்தார்கள் என்பதை அறியவில்லை.
ஆகவே இவர்கள் ஏன் நாட்டுக்கு வருகை தந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்கள் பிரதிநிகளுக்கு உண்டு. ஆகவே அமெரிக்க பிரதிநிதிகளின் வருகை தொடர்பில் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என்றார்.