இலங்கையிலிருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று(22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 141 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இதற்கமைய தனுஷ்கோடியை சென்றடைந்த இலங்கை தமிழர்கள் தாங்களாகவே முச்சக்கரவண்டியில் ஏறி மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்

.இதனையடுத்து மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக தமிழகத்திற்கு அகதியாக வந்து குடியாத்தம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையின் பின்னர் 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *