
(நா.தனுஜா)
இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த சில மாதங்கள் மிகமுக்கியமானவையாகும். அதன்படி இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பான செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவிற்குவரும் நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான மனிதாபிமான செயற்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாக மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை முகங்கொடுத்திருக்கும் பல்பரிமாண நெருக்கடி தொடர்பில் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் வெளியிட்டுள்ள நிலைவர அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கமும் உணவுப்பணவீக்கமும் வீழ்ச்சியடைந்திருக்கின்ற போதிலும், பொருளாதார மற்றும் மனித உரிமைகள் நிலைவரம் இன்னமும் மோசமான மட்டத்திலேயே காணப்படுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் 33 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 68 சதவீதமான குடும்பங்கள் நாளொன்றில் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொண்டிருக்கின்றன.
அவற்றில் குறிப்பாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள குடும்பங்களும், பெண்தலைமைத்துவக்குடும்பங்களும் முறையே 38 சதவீதம், 37 சதவீதம் என்ற ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அதுமாத்திரமன்றி சிறுவர்கள் மத்தியில் போசணைசார் சிக்கல்கள் மேலோங்கிவருவதுடன் மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டின் விளைவாக அரச மருத்துவமனைகளில் அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் இக்காலப்பகுதியில் மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பான செயற்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அதிகரித்திருப்பதுடன் இதுவரையில் இச்செயற்திட்டத்தின்கீழ் 2.8 மில்லியன் மக்கள் பயனடைந்திருக்கின்றனர்.
உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் காசோலைகளைப்பெற்ற 580,000 பேர், உணவுப்பொருள் உதவிகளைப்பெற்ற 600,000 பேர், நுண்போசணைப்பதார்த்தங்களைப்பெற்ற இரண்டு வயதிற்கும் குறைவான 287,100 சிறுவர்கள், திரிபோஷாவைப் பெற்ற 530,000 கர்ப்பிணித்தாய்மார், தீவிர மந்தபோசணைக் குறைபாட்டிற்கு சிகிச்சைபெற்ற ஐந்து வயதிற்கும் குறைவான 3697 சிறுவர்கள் என்போர் இதில் உள்ளடங்குகின்றனர்.
அதேபோன்று 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலையில் உணவு வழங்கப்பட்டுவருகின்றது. மேலும் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 817,000 விவசாயிகளுக்கும், சோளப்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 111,000 விவசாயிகளுக்கும் அவசியமான உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த சில மாதங்கள் மிகமுக்கியமானவையாகும். மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பான செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவிற்குவரும் நிலையில், தேவையுள்ளவரை மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அதேபோன்று 2023 ஆம் ஆண்டுக்கான மனிதாபிமான செயற்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.