இலங்கை அரசாங்கம் இந்துக்களிற்கு சமவாய்ப்பையும் மேன்மையையும் வழங்கவேண்டும் – சாகல ரத்நாயக்காவிடம் அர்ஜூன்சம்பத் வேண்டுகோள்

இந்தியா அரசாங்கம் இலங்கையின் குரலிற்கு செவிமடுக்கவேண்டும் என்றால் இலங்கையில் அரசாங்கம் இந்துக்களிற்கு சமவாய்ப்பையும் மேன்மையும் வழங்கவேண்டும் என இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (பெப் 21) கொழும்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் அர்ஜூன் சம்பத் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் எப்பொழுதும் இந்தியா பேணும் பாதுகாக்கும் வளர்க்கும்.  இந்தியாவின் இன்றைய அயல் நாடு முன்னுரிமைக் கொள்கையால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றுள்ள துன்பங்களும் என்றும் வரும் துன்பங்களுக்கும் வற்றாத உதவி கிடைக்கும்

இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவை ஆளுகின்ற அரசு இலங்கையின் குரலுக்கு செவிமெடுக்க வேண்டும் என்றால் இலங்கையில் இந்துக்களுக்கு இலங்கை அரசு முன்னுரிமையும் சம வாய்ப்பு மேன்மையும் கொடுக்க வேண்டும். இந்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கைத் திட்டத்தை நீங்கள் வகுக்க வேண்டும். யாழ்ப்பாண கலாச்சார நிலையத்துக்கு கடந்த வாரம் சரஸ்வதி மண்டபம் என பெயர் சூட்டியமையே இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற இந்துக்களுக்கு மகிழ்ச்சி. அவ்வாறே கடந்த தீபாவளி நாளன்று குடியரசுத் தலைவர் அலுவலக வளாகத்தில் நந்திக்கொடியைப் பறக்க விட்டு இலங்கை இந்துக்களையும் இந்திய இந்துக்களையும் மகிழ்வித்தீர்கள்.

இவ்வாறு மாதந்தோறும் இந்துக்களுக்கான ஒரு எழுச்சி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வீர்கள் ஆனால் உங்கள் குரலுக்கு இந்தியா செவி சாய்க்கும்.

இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கை முன்பு 24 வீதமாக ஆக இருந்தது இப்பொழுது 12.3 வீதமாககுறைந்துள்ளது. இந்த விகிதாசாரம் மேலும் குறையாமல் இருப்பதற்கு இலங்கை அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்துக்களின் எண்ணிக்கையைக் கடுமையாக குறைக்கிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது போல இலங்கையிலும் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். முன்பு பசு பாதுகாப்புச் சட்ட மூலத்தைக் கொண்டு வந்தீர்கள். அதை இன்னமும் பாராளுமன்றம் நிறைவேற்றிச் சட்டமாக்கவில்லை. அதையும் சட்டமாக்குங்கள்.

வடக்கே திருக்கயிலாயத்தில் இருந்து தெற்கே கதிர்காமம் வரை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாக பழமையான நிலப்பகுதியின் ஒரு பகுதியே இந்து சமய நாடான இலங்கை. புதிதாக உருவாக்க உள்ள இலங்கை அரசியலமைப்பு விதிகளில் இந்து சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற விதியையும் சேர்ப்பீர்களானால் இலங்கையில் உள்ள இந்துக்களும் இந்தியாவில் உள்ள இந்துக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்திய அரசாங்கம் உங்கள் குரலுக்குச் செவி சாய்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *