
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் புதிய கட்சியில் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பழைய உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள அவர், தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே தமது புதிய கட்சியில் இணைந்துகொள்ளுமாறு விமுக்தி குமாரதுங்கவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளதாக குமார வெல்கம கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி புதிய கட்சியின் தலைமையகம் பத்தரமுல்லை பிரதேசத்தில் திறக்கப்படும். அதன் பின்னர், நாடு முழுவதற்குமான அமைப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் கட்சியின் துணை அமைப்புகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய கட்சியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார் எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.