
சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கக்கோரி கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். ஆனால், அந்த மனுவை கடந்த 2021ல் தமிழக அரசு நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து, தன்னை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கக்கோரி ராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஒஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்பதாலும், அவரின் சிறை நன்னடத்தையை கருத்தில் கொண்டும் மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசிடம் வைத்த கோரிக்கையை 3 வாரத்துக்குள் மீண்டும் மறுபடியும் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதேவேளையில் அந்த இடைப்பட்ட காலத்தில் மனுதாரரை உரிய முகாமிற்கு மாற்றவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.