(எம்.எப்.எம்.பஸீர்)

வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் ஆள் கடத்தல் சம்பவ வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவரை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினர் இன்று (22) கைது செய்தனர்.

பல்லேகலையைச் சேர்ந்த ஒருவரும், குருணாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பல்லேகலையைச் சேர்ந்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றைய நபரை குருணாகலைக்கு சென்று கைது செய்து திரும்பியதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று ( 22) கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவ்விருவரையும் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதனிடையே, வேலை வாங்கி தருவதாக கூறி , இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் ஆள் கடத்தல் சம்பவ வலையமைப்புடன் தொடர்புடைய, இலங்கையில் இருக்கும் பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் எனக் கூறி கைது செய்யப்பட்ட தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க எனும் பெண்ணை, நேற்று ( 21) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் குறித்த பெண்ணை விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இதற்கான உத்தரவை பிறப்பித்து வழக்கை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

வேலை வாங்கி தருவதாக கூறி , இலங்கையில் இருந்து 6 பெண்களை ஓமானில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குறித்த பெண் மீது மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் குறித்த குற்றச்சாட்டை அப்பெண் மறுத்துள்ளார். அவருக்காக இன்று மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி நிரோஷன் சிறிவர்தன தலைமையிலான சட்டத்தரணி சமந்த பிரேமசந்ர, பந்துல திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் ஊடாக அவர் இதனை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த பெண் 21 வருடங்களாக ஓமானில் ‘ இன்டர் கிரேடட் ரூலர் ‘ எனும் நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக சேவையாற்றியுள்ளதாகவும், கடந்த 2019 ஆம் திகதி நாட்டுக்கு வந்து திரும்பியதும் கடந்த 2020 இல் அவர் சுகயீனம் அடைந்ததால் நாடு திரும்பியதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு தெரிவித்தனர். அவர் மீண்டும் ஓமானுக்கு செல்ல முயன்ற போதே அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை இருப்பது தெரியவந்ததாகவும் அதனையடுத்தே அவர் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவில் சரணடைந்ததாகவும் சட்டத்தரணிகள் கூறினர். சந்தேக நபரான பெண் குறித்த நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளர் மட்டுமே என தெரிவித்த சட்டத்தரணிகள் அதனை மையப்படுத்தி முன் வைத்த பிணைக் கோரிக்கையை ஏற்றே நீதிவான் அவருக்கு பிணையளித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆட்கடத்தல் விவகாரத்தில் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 5 ஆகும். அவர்களில் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெண் ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *