இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழா  மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா போட்டி நிகழ்ச்சிகள் ஒரே தினத்தன்று நடைபெறவுள்ளது.

தேசிய விளையாட்டு விழாவுடன் தொடர்புபட்ட முழு மரதன் ஓட்டப் போட்டியும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவுடன் தொடர்புபட்ட மினி மரதன் ஓட்டப் போட்டியும் கம்பஹா மாவட்டத்தில் சனிக்கிழமை (08) அதிகாலை நடைபெறவுள்ளது.

42.195 கிலோ மீற்றர் தூரம் கொண்ட மரதன் ஓட்டப் போட்டி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 15 நிமிடங்கள் கழித்து பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கான மினி மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளுக்கும் நெஸ்லே நெஸ்டோமோல்ட் பூரண அனுசரணை வழங்குகின்றமை விசேட அம்சமாகும்.

கம்பஹா உடுகம்பொல மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பௌத்த விகாரை வளாகத்தில் ஆரம்பமாகும் மரதன் ஓட்டப் போட்டி உடுகம்பொல தம்மிட்டவரை சென்று மீண்டும் திரும்பி ஆரம்பித்த இடத்தில் நிறைவுபெறும்.

தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் 70 வீரர்களும் 30 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தேசிய விளையாட்டு விழாவின் மற்றொரு அம்சமான 82.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி சனிகிழமையும் 165 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். இந்த இரண்டு போட்டிகளும் இரண்டு நாட்களிலும் காலை 9.40 மணிக்கு ஆரம்பமாகும்.

அத்துடன் ஆண், பெண் இருபாலாருக்குமான 20 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வேகநடை போட்டி கம்பஹா உடுகம்பொல பௌத்த விகாரைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த மூன்று போட்டிகளிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதனைவிட இந்த மூன்று வகையான போட்டிகளிலும் முதல் 10 இடங்களைப் பெறும் வீர, வீராங்கனைகளுக்கு முறையே 50,000 ரூபா, 40,000 ரூபா, 30,000 ரூபா, 20,000 ரூபா, 18,000 ரூபா, 16,000 ரூபா, 14,000 ரூபா, 12,000 ரூபா, 10,000 ரூபா, 8,000 ரூபாவைக் கொண்டு மொத்தம் 218,000 ரூபா பணப்பரிசு  வழங்கப்படும்.

தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா , மினி மரதன் மற்றும் நகர்வலப் போட்டி

கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் விளயாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 21.0195 கிலோ மீற்றர் தூரம் கொண்ட மினி மரதன் ஓட்டப் போட்டி கம்பஹாவில் அதிகாலை 5.45 மணிக்கு ஆரம்பமாகும்.

16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடத்தப்படும் மினி மரதன் ஓட்டப் போட்டியில் 450 வீரர்களும் 150 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன் இருபாலாருக்குமான நகர்வல ஓட்டப்  போட்டி பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாவுள்ளது.

14 வயதுமுதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடத்தப்படும் நகர்வல ஓட்டப்  போட்டியில் 800 வீரர்களும் 400 வீராங்கனைகளுமாக மொத்தம் 1200 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

மினி மரதன் ஓட்டப் போட்டியில் இருபாலாரிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் முறையே 25,000 ரூபா, 20,000 ரூபா, 15,000 ரூபா பணப் பரிசுகள் வழங்கப்படுவதுடன் 4ஆம் இடத்திலிருந்து 10ஆம் இடம் வரையும் பணப் பரிசுகள் வழங்கப்படும்.

நகர்வல ஓட்டப் போட்டியில் இருபாலாரிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் முதல் 5 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 15.000 ரூபா, 10,000 ரூபா, 7,500 ரூபா, 5,000 ரூபா, 5,000 ரூபா பணப் பரிசுகளும் 6ஆம் இடத்திலிருந்து 10ஆம் இடம் வரை ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

இது இவ்வாறிருக்க, நான்கு கட்டங்களாக நடத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பிரதான அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச அரங்கில் நவம்பர் 16ஆம் திகதிமுதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *