(எம்.எப்.எம்.பஸீர்)
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஜி.ஐ. குழாய் கொள்வனவு மற்றும் தவறான பயன்பாடு தொடர்பான வழக்கில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்தது.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் சந்திரபால லியனகே மற்றும் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (22) இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 990,000 ரூபா பணத்தை செலவிட்டு, 600 ஜீ.ஐ. குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சட்டத்தின் 70 ஆம் அத்தியாயம் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இனறு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானதுடன், அவர்கள் முன்னிலையிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதிகள் மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க அனுமதித்தார்.
மேலும் பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். முதல் பிரதிவாதி அரச பயணமாக வெளிநாடு போக வேண்டி இருப்பின் அது குறித்து மன்றை தெளிவுபடுத்துமாறும், அச்சந்தர்ப்பத்தில் அவ்விடயங்களை ஆராய்ந்து அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் இதன்போது நீதிபதி குறிப்பிட்டார்.
பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முன் விளக்க மாநாட்டுக்காக எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.