இளைஞர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறக் கூடாது

இளைஞர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறக் கூடாது

இந்தியாவைப் போல் நம் நாட்டிலும் IIT, IIM நிறுவகங்களை உருவாக்க வேண்டும் எனவும், இதன் மூலம் எந்தப் பிள்ளைகளும் வாய்ப்பற்றுப் போகாத சூழல் உருவாக வேண்டும் எனவும், எல்லோராலும் சாதாரண தரம், உயர் தரம் மற்றும் பட்டம் பெற முடியாது போனாலும், தங்கள் சொந்த அடையாளம் மற்றும் நலன்களின் அடிப்படையில் முன்னேற ஒரு வழியை கொள்கையாக்கம் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நமது கலாச்சாரத்துடன், உலகச் சந்தைக்குத் தேவையான கல்வி உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு Sri Lanka First என்ற தேசியத்துவம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இத்தொலை நோக்கை ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 70 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று தமனல்வில மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இன்று (13) அன்பளிப்புச் செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaFirst என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து வளங்களையும் திரட்டி முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும், இளைஞர்களின் கனவுகள், அபிலாஷைகளை நனவாக்கும் சூழலை இந்நாட்டில் உருவாக்கி, நாட்டின் அபிவிருத்தியை இளைஞர்களிடம் பொறுப்பாக்கி, இளைஞர்கள் அரசியல்வாதிகளின் காலடியில் செல்லும் கலாசாரமும் அடிமைத்தனமும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், இளைஞர்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாக மாறக் கூடாது எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் இளைஞர்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் வாய்ப்புகள் நிறைந்த தேசத்தை உருவாக்குவதுமே அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய பணியாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வங்குரோத்தான நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, புதிய வழியில் சிந்திக்க வேண்டும் எனவும், ஆட்சியைப் பெற்றே நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என 74 வருடங்களாக நிலவி வந்த மனப்பதிவை மாற்றி, அதிகாரம் இல்லாவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் பங்களிக்க முடியும் என்பதை தற்போதைய எதிர்க்கட்சி நடைமுறையில் நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை, 70 பேரூந்துகள் பாடசாலைக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 339.2 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும், மூச்சுத் திட்டத்தின் மூலம் 56 மருத்துவமனைகளுக்கு 1719 இலட்சம் ரூபா மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், அதிகாரம் இல்லாத போதும் கூட மக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையை தற்போதைய எதிர்க்கட்சியே செலவிட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி பதவியோ, பிரதமர் பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ கிடைக்காமலே இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்குச் சேவை செய்ய, நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ அல்லது பிற உயர் பதவிகளாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தற்போதைய எதிர்க்கட்சிகளினால் அதனை நடைமுறையில் நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தனை பணிகளையும் செய்யும் போதும் பல்வேறு நபர்கள் பலவிதமாக விமர்சித்தாலும் அந்த எந்த விமர்சனங்களாலும் நாடு அபிவிருத்தியடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு பணத்தை அச்சடித்தல் மட்டும் போதாது எனவும், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமைத்துவம் தேவை என்றும், எதிர்மறை மற்றும் பிற்போக்குத்தன
எண்ணப்போக்குகளிலிருந்து விடுபட்டு நேர்மன சிந்தனை மூலம் நாட்டை மீட்டெடுக்க புதிய வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களைப் பயன்படுத்தி 10155 பாடசாலைகளையும் முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உலகில் புதிய போக்காக இருக்கும் பசுமைக் கொள்கையை இந்நாட்டுப் பாடசாலைக் கட்டமைப்புடன் இணைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *