இளையோர் டெஸ்டில் இங்கிலாந்தை 3 விக்கெட்களால் வீழ்த்தியது இலங்கை

இங்கிலாந்தின் செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் 24 ஆம் திகதி புதன்கிழமை நிறைவுபெற்ற 19 வயதுக்குட்பட்ட 4 நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டது.

273 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை,  ரனுத சோமரட்னவின் ஆட்டமிழக்காத அபார சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்களை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், ரனுத சோமரட்ன மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டமிழக்காமல்120 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அத்துடன் அவர் மூன்று முக்கிய இணைப்பாட்டங்களிலும் பங்காற்றியிருந்தார்.

அவரும் லஹிரு தெவட்டகேயும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 89 ஓட்டங்கள் இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டின.

லஹிரு தெவட்டகே 49 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 7ஆவது விக்கெட்டில் வினுஜ ரன்புல்லுடன் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த ரனுது சோமரட்ன, பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் வனுஜ சஹானுடன் மேலும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

வினுஜ ரன்புல் 18 ஓட்டங்களையும் வனுஜ சஹான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக அசித்த வன்னிநாயக்க 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

எண்ணிக்கை சுருக்கம்

19இன் கீழ் இங்கிலாந்து 1ஆவது இன்: 387 (ஜோர்ஜ் பெல் 107, ரொஸ் விட்பீல்ட் 86, பேர்ட்டி போர்மன் 58, துவிந்து ரணதுங்க 100 – 4 விக்.)

19இன் கீழ் இலங்கை 1ஆவது இன்: 407 (அசித்த வன்னிநாயக்க 132, ரனிது சோமரட்ன 65, ரவீன் டி சில்வா 62, வினுஜ ரன்புல் 42, பேர்ட்டி போர்மன் 94 – 4 விக்.)

19இன் கீழ் இங்கிலாந்து 2ஆவது இன்: 292 (ரொஸ் விட்பீல்ட் 110, பென் மெக்கினி 56, வனுஜ சஹான் 89 – 4 விக்., துவிந்து ரணதுங்க 34 – 3 விக்.)

இலங்கை (வெற்றி இலக்கு 373) 2ஆவது இன்: 276 – 7 விக். (ரனிது சோமரட்ன 120 ஆ.இ., லஹிரு தெவட்டகே 49, பந்துவீச்சில் தோமஸ் அஸ்பின்வோல் 67 – 4 விக்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *