உக்ரேனுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐஎம்எவ்) இடையில் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எவ் தெரிவித்துள்ளது.
முழுமையான கடனுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு இந்த இணக்கப்பாடு வழிவகுத்துள்ளது.
உக்ரேனின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரேனின் முயற்சிக்கும் இந்த கடன்திட்டம் உதவும் என ஐஎம்எவ் தெரிவித்துள்ளது.
ஐஎம்எவ் மூலம் 20 பில்லியன் டொலர்களை உக்ரேன் எதிர்பார்க்கிறது.
கடந்த 13 முதல் 17 ஆம் திகதி வரை போலந்தின் வோர்ஸோ நகரில் கெவின் கிறே தலைமையிலான ஐஎம்எவ் அதிகாரிகள் குழுவினரும் உக்ரேனிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர் அதன்பின் ஐஎம்எவ் வெளியிட்ட அறிக்கையில் இந்த இணக்கப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த 4 மாதகால செயற்திட்டத்தில் உக்ரேன் வலுவான செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என ஐஎம்எவ் தெரிவித்துள்ளது.
‘ஐஎம்எவ் இன் முழுமையான கடன்திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரேனின் முயற்சிக்கு உதவியாக இருக்கும். நிர்வாகத்தைப் பலப்படுத்தல், ஊழல் ஒழிப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் யுத்தத்தின்பின்னரான வளர்ச்சிக்கான அடித்தளங்களை அமைத்தல் ஆகியற்றில் உக்ரேனிய அதிாரிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என கெவின் கிறே கூறியுள்ளார்.