
(எம்.மனோசித்ரா)
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்க்குமாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களையும், இதற்கு காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதே இதன் ஊடாக வெளிப்படுத்தப்படுவதாகவும் , சுயாதீன நீதித்துறை மீதான அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு விரைவில் வீதிக்கிறங்கி போராட தயாராகுமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கட்டுவன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தேர்தலுக்காக வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எதற்காகவும் பயன்படுத்த முடியாது. தேர்தலுக்காக மாத்திரமே அந்த நிதியை செலவிட முடியும் என்று உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் , தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து நாட்டின் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கும் , பக்கசார்பற்ற நீதிமன்றத்திற்கும் அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வாதிகார அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக வீதிக்கிறங்கி போராடுவதற்கு மக்கள் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அவர்களால் மக்களிடம் செல்ல முடியாததன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். சதித்திட்டத்திற்கமைய திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்புரிமைக் குழுவின் பணிகள் முடியும் வரை இந்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும் என அவர்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரப்படுகிறது.
எனவே வாக்குரிமைக்காக வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் சர்வாதிகார அரசாங்கத்தை தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்.