உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெள்ளி வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணையாளர்

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் இல்லாமல் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.தேர்தல் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக இடம்பெற்றது, தேர்தல் இடம்பெறும் சூழல் உள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்,தேர்தல் சட்டத்திற்கு அமையவே ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இலாபம் ஈட்டும் நிறுமனமல்ல,நாட்டு மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஆணைக்குழு ஆகவே தேர்தல் செயற்பாடுகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும். சட்டத்தின் பிரகாரம் தேர்தலை விரைவாக நடத்துவோம்.தேர்தலுக்கான 10 பில்லியனை ஒரே கட்டமாக கோரவில்லை,கட்டம் கட்டமாகவே கோருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய கலந்துரையாடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022.03.09ஆம் திகதி நடத்த வேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மாகாண சபைகள் மற்றும்,உள்ளூராட்சிமன்ற அமைச்சர் ஒருவருட காலத்திற்கு பிற்போட்டார்,அதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த செப்டெம்பர் மாதம் பொறுப்பாக்கப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள 25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் 2022.12.26 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்கள்,அதற்கான வர்த்தமானி அறிவித்ததை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.

இதற்கமைய தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்கள்.கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 339 உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள்,329 சுயாதீன குழுக்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.நாடளாவிய ரீதியில் 80720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே தபால்மூல வாக்கெடுப்பக்கான வாக்குச்சீட்டுக்கள் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி விநியோகிக்கவும்,தபால்மூல வாக்கெடுப்பை கடந்த பெப்ரவரி மாதம் 22,23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்தவும்,வாக்கெடுப்பை மார்ச் 09 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு,உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர்,அரச அச்சகத் திணைக்கள தலைவர்,அரசாங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் ஆகியோரை ஆணைக்குழுவிற்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்,தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இவர்கள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அரச சேவைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் திறைச்சேரி கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி விசேட சுற்றறிக்கையை வெளியிட்டது.அந்த சுற்றறிக்கையில் தேர்தல் உள்வாங்கப்படவில்லை.

தபால் மூல வாக்கெடுப்புக்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முழுமையாக ஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டது,பின்னர் 13 ஆம் திகதி வழங்குவதாக குறிப்பிட்டது,இருப்பினும் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்கவில்லை.

இறுதியில் நிதி நெருக்கடியால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை தொடர முடியாது என அரச அச்சகத் திணைக்களம் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாலையில் தான் அறிவித்தது.

தேர்தல் பணிகளுக்கான வாக்குச்சீட்டு உட்பட இரகசிய ஆவணங்கள் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட முடியும்,தனியார் நிறுவனங்களில் அச்சிட முடியாது,ஆகவே அரச அச்சகத் திணைக்களம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் தான் தபால் மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது.

தேர்தல் இல்லாமல் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.தேர்தல் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக இடம்பெற்றது,நாட்டில் தேர்தல் இடம்பெறும் சூழல் உள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்,தேர்தல் சட்டத்திற்கு அமையவே ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தது.

நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறும் போது அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் தனிப்பட்ட விடயமல்ல,பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயம் முறையற்றது,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இலாபம் ஈட்டும் நிறுவனமல்ல,நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் 10 பில்லியன் ரூபாவாக அமையும் என மதிப்பிட்டோம்.10 பில்லியன் ரூபாவையும் ஒரே கட்டமாக கோரவில்லை.கட்டம் கட்டமாகவே கோரினோம்.தேர்தல் நடவடிக்கைகளுக்காக 165 மில்லியன் ரூபாவை திறைச்சேரி வழங்கியுள்ளது.

தேர்தல் நடத்தும் போது அதற்கான நிதியை முழுமையாக திறைச்சேரி ஒருபோதும் விடுவிக்காது கட்டம் கட்டமாகவே விடுவிக்கும் இதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபாவில் ஜனவரி மாதத்திற்கு 100 மில்லியன் ரூபாவும்,பெப்ரவரி மாதம் 597 மில்லியன் ரூபாவும் ,மார்ச் மாதம் 1570 மில்லியன் ரூபாவும்,ஏப்ரல் மாதம் 1400 மில்லியன் ரூபாவும், மே மாதம் 580 மில்லியன் ரூபாவும்,ஜூன் மாதம் 115 மில்லியன் ரூபாவும்,ஜூலை மாதம் 75 மி;ல்லியன் ரூபாவும் ஒதுக்குமாறு திறைச்சேரியிடம் வலியுறுத்தினோம்.

அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் திணைக்களத்திற்கு 1550 மில்லியன் ரூபாவும்,தபால் திணைக்களத்திற்கு 400 மில்லியன் ரூபாவும்,பாதுகாப்பு அமைச்சுக்கு 35 மில்லியன் ரூபாவும்,அரச அச்சகத் திணைக்களத்திற்கு 1000 மில்லியன் ரூபாவும்,அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *