ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை – பெப்ரல் கவலை

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சற்று காலம் தாமதித்தேனும் தேர்தல் நடத்தப்படும் என்று ஆரம்பத்திலிருந்த நம்பிக்கையையும் இப்போது இழந்துவிட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பெப்ரல் தலைமையகத்தில் இன்று (16) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதுள்ள நிலைவரத்தை அவதானிக்கும் போது ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் தென்படவில்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே முன்னின்று செயற்பட்ட அமைப்பு என்ற ரீதியில் பெப்ரல் அமைப்பு இந்நிலை எண்ணி கவலை கொள்கிறது.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள வாக்குரிமையை அரசாங்கம் பறிக்கும் என்று நாம் ஆரம்பத்தில் நம்பவில்லை. சற்று காலம் தாமதித்தேனும் தேர்தல் நடத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் நீதிமன்ற உத்தரவைக் கூட கவனத்தில் கொள்ளாத வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அரசியலமைப்புசபை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என்பன சமநிலையில் காணப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். ஆனால் இன்று இந்த சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நிறைவேற்றதிகாரத்தினால் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது பாராளுமன்றமும் அவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகிறது.

எந்தத் தேர்தல் என்பது இங்கு முக்கியத்துவமுடையதல்ல. எந்தத் தேர்தலானாலும் அது உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அவசியமானதாகும். மக்களின் ஜனநாயக உரிமையை ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே அரசாங்கம் காணப்படுகிறது. இதற்காக வெ வ்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டாலும் , தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு சுமார் 30 நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

சட்டம், அமைச்சரவை அதிகாரங்கள், நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்கள் , நிதி அமைச்சரின் அதிகாரங்கள் என்பவற்றைப் பயன்படுத்தியும் , இவற்றுக்கு அப்பால் அச்சுறுத்தல்கள் மூலமும் , அழுத்தங்களைப் பிரயோகித்தும் அரசாங்கம் அந்த முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. இந்த அரசாங்கம் நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் என்று நாம் நம்பவில்லை. ஜனநாயக ரீதியில் இது பாரதூரமானதொரு நிலைமையாகும்.

ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் மக்களுக்கான கருத்து சுதந்திரம் வழங்கப்படாவிட்டால் , இதனால் ஏற்படக் கூடிய பாரதூரமான பிரதிபலன் தொடர்பில் அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எனவே நாட்டில் அமைதியற்ற நிலைமை ஏற்படாத வகையில் நிறைவேற்றதிகாரம் , அரசியலமைப்புசபை இணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் , பாராளுமன்றத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *