அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பி குழுவுக்கான இரண்டு முக்கிய முதல் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
இரண்டு தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை அதிரவைத்து தனது ஆரம்பப் போட்டியில் வெற்றியீட்டிய ஸ்கொட்லாந்து, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அயர்லாந்தை இன்று எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி ஹோபார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.20 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2008இலிருந்து 2019வரை நடைபெற்ற 13 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 7 – 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் அயர்லாந்து முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் 2 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.
எனினும் கடந்த கால போட்டி முடிவுகளை வைத்து இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிக்க முடியாது.
அயர்லாந்து தனது ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தபோதிலும் இன்றைய போட்டியில் வெற்றியீட்ட கடுமையாக முயற்சிக்கவுள்ளது.
எனவே அயர்லாந்தும் ஸ்கொட்லாந்தும் மோதும் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
அயர்லாந்து அணியில் போல் ஸ்டேர்லிங், கேர்ட்டிஸ் கெம்ஃபர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகியோரும் ஸ்கொட்லாந்து அணியில் மெட் வொட், ரிச்சி பெறிங்டன், ஜோர்ஜ் முன்சி ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.