
ஒவ்வொரு 11 நிமிடங்களிலும் ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி தனது துணைவரால் அல்லது குடும்ப அங்கத்தினரால் கொல்லப்படுவதாக ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகின் மிக பரவலடைந்துள்ள மனித உரிமைகள் மீறலாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் எதிர்வரும் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதையொட்டி ஐ.நா. செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்களும் சிறுமிகளும், வெறுப்புப்பேச்சு, பாலியல் தொந்தரவுகள் என இணைய வன்முறைகளையும் எதிர்கொள்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.
மக்கள் தொகையில் அரைப்பங்கினரை இலக்குவைக்கும் பாகுபாடுகள், வன்முறைகளுக்காக அதிக விலை செலுத்தப்படுகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள், வாழ்க்கையின் சகல துறைகளிலும் பங்குபற்றுவதை அது மட்டுப்படுத்துவதுடன், அவர்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றை நிராகரிக்கிறது. எமது உலகின் தேவைகளான சமத்துவமான பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றையும் தடுக்கிறது எனவும் ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.