இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பற்றி நேரடியாக அறிந்த ஜப்பான் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
கடன்கொடுநர்களுடனான, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் இலங்கையுடன். இணைத்தலைமை வகிக்க ஜப்பான் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடன் மறுசீரமைப்பு விடயத்தின் இலங்கையின் கடன் கொடுநர்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன், அண்மையில் ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு அரசாங்கத்துடன், முன்னெடுத்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஜப்பான் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இன்றைய விசேட உரையை அடுத்து வெளியாகியுள்ள இந்த செய்தியின்படி, இந்த விவகாரம் முக்கியமான ஒன்று என்பதால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ஜப்பான் முழுமையாக ஆதரவளிக்கத் தயாராக உள்ளதென பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.