கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார்; நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார் இல்லை – அஜித் ராஜபக்

(இராஜதுரை ஹஷான்) 

பொருளாதார பாதிப்பின் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார்; நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார் இல்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைந்து, அரசாங்கம் தேர்தலை பிற்போட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது அவசியமா என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொருளாதார பாதிப்பின் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார்; ஆனால் நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதை வெளிப்படையாக குறிப்பிடுகிறோம்.

தற்போதைய பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக அரசியல் இலாபம் தேடிக்கொள்ள எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரவின் பேச்சுக்களை கேட்பதற்கு அருமையாக இருக்கும். ஆனால், அவை நடைமுறைக்கு சாத்தியமற்றது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் சவால்களை ஏற்க முன்வரவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *